தலச்சிறப்பு |
வில்வ வனமாக இருந்த காரணத்தால் 'கூவிளம்பூதூர்' என்று வழங்கப்பட்டது. வில்வத்திற்கு 'கூவிளம்' என்றொரு பெயர் உண்டு. பின்னர் மருவி 'கொள்ளம்புதூர்' என்று ஆனது.
மூலவர் 'வில்வாரண்யேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.
பிரகாரத்தில் பொய்யா விநாயகர், வலம்புரி விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், பஞ்ச லிங்கங்கள், மகாலட்சுமி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
காவிரிக் கரையில் உள்ள பஞ்ச ஆரண்யத் (ஆரண்யம் - வனம்) தலங்களுள் இத்தலமும் ஒன்று. கருகாவூர் - முல்லை வனம், அவளிவநல்லூர் - பாதிரி வனம், அருதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னி வனம், இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம், கொள்ளம்புதூர் - வில்வ வனம். இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் வழிபடுவது சிறப்பு. இவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது அருகில் இருந்த முள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் ஓடத்தை கரையில் நிறுத்தியிருந்தனர். சம்பந்தர் அடியார்களுடன் ஓடத்தில் ஏறி 'கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்' என்று பதிகம் பாட, ஓடம் அக்கரையை அடைந்து அனைவரும் கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டனர். இதை நினைவுகூறும் வகையில் ஐப்பசி மாதம் அமாவாசையன்று 'ஓடம் போக்கி' என்னும் திருவிழாவாக நடத்துகின்றனர்.
விநாயகர், பிரம்மா, அகத்தியர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், வசிஷ்டர், மார்க்கண்டேயர், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்ணுவ முனிவர், வாமதேவர், இடைக்காடர், சாண்டிலியர், அர்ச்சுனன், ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|